×

வீணாகும் உணவுகளை குப்பையில் கொட்ட கூடாது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுறுத்தல்

ஒட்டன்சத்திரம், பிப்.7: ஒட்டன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் சார்பில் உணவு வீணடிப்பதை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றார். உணவு வழங்கல் துறை வருவாய் ஆய்வாளர் கண்ணன் மற்றும் நுகர்வோர் பேரவை ஒருங்கிணைப்பாளர் அபுதாஹிர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பாண்டியராஜன் கருத்துரையாற்றினார். ஒட்டன்சத்திரம் வட்ட வழங்கல் அலுவலர் நந்தகோபால் பொதுவிநியோக திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்கள் வழங்குவதால் அரசுக்கு ஏற்படும் செலவுகளை சுட்டிக்காட்டினார். ஒரு கிலோ அரிசி சுமார் 27 ரூபாய்க்கு அரசு விலைகொடுத்து வாங்கி அதை பொதுமக்களுக்கு நியாய விலை கடைகளில் இலவசமாக வழங்குகிறது. எனவே உணவுப்பொருட்களை வீணடிப்பதை தவிர்க்க வேண்டும் என மாணவிகளிடம் கேட்டுக்கொண்டார்.நுகர்வோர் பேரவையின் மாவட்டத் தலைவர் விஸ்வரத்தினம் பேசுகையில், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வகத்தின் சர்வதேச பசியாளர்கள் நாடுகள் அடங்கிய அட்டவணையில் இந்தியா 102வது இடம் பிடித்து கடந்த ஆண்டை விட பின்னடைவு அடைந்து உள்ளது. 30.3 மதிப்பெண் பெற்று இந்தியா பசியால் வாடுவோர்கள் நிலையில் எச்சரிக்கை குறியீட்டை பெற்று உள்ளது. மாணவர்கள் வீட்டிலும், பள்ளியில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்திலும் உணவை வீணாக்க கூடாது. திருமணம் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது உணவை வீணடிக்க கூடாது. பொது நிகழ்ச்சிகளில் மிகுதியாகும் உணவை குப்பைகளில் கொட்டாமல், பசியால் வாடுவோருக்கு கொடுத்து உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.நுகர்வோர் பேரவை மாவட்ட இணைச்செயலாளர் திருமலைசாமி நன்றி கூறினார்.

Tags :
× RELATED இயற்கை நல உணவு பயிற்சி முகாம்